ஓமிக்ரான்: சர்வதேச விமான சேவைகள் ஜனவரி 31 வரை நிறுத்திவைப்பு.
டெல்லி: வழக்கமாக இயக்கப்படும் சர்வதேச விமான சேவைகளுக்கான தடை ஜனவரி 31 வரை நீட்டிக்கப்படுவதாக சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
தற்போது ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட 32 நாடுகளுடன் இயக்கப்படும் சர்வதேச விமான சேவையில் மாற்றங்கள் இல்லை எனவும் DGCA தெரிவித்துள்ளது.
இந்த கட்டுப்பாடு சர்வதேச அனைத்து சரக்கு விமானங்களுக்கும், அவசர தேவைகளுக்கு இயக்கப்படும் விமான சேவைகளுக்கும் பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தியதால் இந்தியாவில் சர்வதேச விமானங்கள் சேவை மார்ச் 23ம் தேதி 2020ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. தற்போது கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதால் மீண்டும் விமான சேவையை தொடங்க மத்திய அரசு முடிவு செய்திருந்தது. இதை அடுத்து
இந்தியாவில் டிசம்பர் 15ம் தேதி முதல் சர்வதேச விமானங்கள் இயக்கப்படும் என சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் அதிகாரப் பூர்வ தகவலை தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது உருமாறிய கொரோனாவா ஓமிக்ரான் மீண்டும் அச்சுறுத்த தொடங்கியதால், வழக்கமான சர்வதேச விமான சேவைக்கான தடை ஜனவரி 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் அதிகாரப் பூர்வ தகவலை தெரிவித்துள்ளன.